வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு பள்ளி,கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற கர்நாடகா உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஷ்வத் நாராயண் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக,அவர் கூறுகையில்:”இந்திய சுதந்திரத்தின் ‘அமிர்த மஹோத்சவ்’ விழாவைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் தங்களது வீட்டில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.மேலும்,மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ.யின் கீழ் உள்ள அரசு/உதவி பெறும்/உதவிபெறாத கல்லூரிகள் தேசியக்கொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.
இதனைத் தொடர்ந்து,வகுப்புகளின் போது இது குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தவும்,சம்மந்தப்பட்ட அறிவிப்பு பலகையில் தகவல்களைக் காண்பிக்கவும் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் வாகனங்களில் தேசிய கொடியை ஏற்றுமாறு டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே,அனைத்து மக்களும் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தேசிய அளவில் பிரச்சாரம் செய்யும் பாஜக அரசின் ‘ஹர்கர் திரங்கா’ என்ற திட்டத்தின்கீழ் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.