பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வகித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல்மைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பகவந்த் மான், அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் இனத்தவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும் பகவந்த் மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் மூலம் இதுவரி இலவச மின்சாரம் பெற்று வரும் பட்டியல் இனத்தவர்கள், பிறபடுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அனைவரும் இனி 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் பெறுவர். அவர்கள் 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால், கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் அமலுக்கு வந்ததுள்ளது.