மத்திய அரசு முப்படைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகபடுத்த அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் படி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க முடியும். அதைத்தொடர்ந்து 25 சதவீதம் பேர் மட்டுமே அப்பணியில் தொடர்ந்து நீடிக்க முடியும், மேலும் ஓய்வூதியமும் கிடையாது என்ற அறிவிப்புகளால் தற்போது இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் கொதித்தெழுந்த இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, உத்தரபிரதேசம், பிகார், ஹரியாணா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடிய விடிய போராட்டத்தில் குதித்துள்ளனர். தென் மாநிலங்களில் தெலுங்கானாவில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரியாணா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் வாராங்கலில் ரெயில் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், ஒருவர் உயிரிழந்ததார். 15 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 12 ரெயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த பதற்றமான சூழ்நிலையால் 500-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல நூற்றுக்கணக்கான ரெயில்கள் வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. 90-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதி வழியிலேயே நின்றுக் கொண்டு இருக்கும் அசவுகர்யமான சூழ்நிலை நிலவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அக்னிபாத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தால் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் எந்த மாதிரியாக தாக்கங்களை ஏற்படுத்தும்? மேலும் வேலை வாய்ப்பில் என்ன மாதிரியான பலன்கள் அல்லது எதிர்மறையான விஷயங்களை அக்னிபாத் பிரதிபலிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் விசால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தான் பிறப்பித்த மனுவில், நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து எழுந்த வன்முறைப் போராட்டங்கள், அதனால் சேதப்படுத்தப்பட்ட ரெயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துக்களுள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட வேண்டி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை (20ம் தேதி) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் சார்பில் கூறப்படுகிறது.நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை போக்கும் வண்ணம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
அக்னிபாத் திட்டம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.