விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநர் முடிவுக்கு விடக்கூடாது என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழ்நாடு அரசு, அதேநேரம் உயர் நீதிமன்றமே கூட விடுதலை குறித்து பரிசீலிக்கலாம் என கூறியது.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கின் தீர்ப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் வாசிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அதிகாரம் போல உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறி நளினி மற்றும் ரவிச்சந்திரன் விடுதலை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.