தேர்தல் வாக்குறுதிகளில் 80% க்கு மேலே நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 20% தான் உள்ளது. அதையும் நிச்சயம் காப்பாற்றுவான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மூத்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்வு, அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 500 நிர்வாகிகளுக்குப் பொற்கிழி வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நாசர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. ஜூன் 17-ஆம் தேதியும் கொண்டாடுகிறோம், ஏன் அடுத்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வரை கூட கொண்டாடுவோம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வேருக்கு விழா எடுக்க வேண்டும். இந்த கழகத்தின், தமிழகத்தின் வேர் கருணாநிதிதான் என்பதை மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது எனத்தெரிவித்தார். மேலும், ஆலமரமாகக் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் இயக்கத்திற்குப் பாடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் கழக முன்னோடிகள் எனத்தெரிவித்த அவர், செய்த பணிகளுக்குப் பரிகாரம் பொற்கிழி என நினைக்க வேண்டாம். செய்துகொண்டிருக்கும் பணிகளுக்கு எது கொடுத்தாலும் ஈடாகாது எனக் கூறினார்.
இங்கிருப்பவர்கள் அமைச்சர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால், இந்த பொறுப்புகளில் இருப்பதற்கு முழு காரணம் நீங்கள் தான், எனத் தெரிவித்த அவர், இது உங்களை ஊக்கப்படுத்தத்தானே தவிர, நன்றி சொல்ல அல்ல எனவும், உங்கள் உழைப்பிற்கு ஈடு இணை கிடையாது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உங்களுக்கு மரியாதை, பெருமையைத் தேடித்தந்து, மேடையில் இருக்கும் நாங்கள் பெருமையடைய வேண்டும் எனவும், தமிழ்ச்சமுதாயத்திற்கு பதவி எனும் படகேறித்தான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. நீந்திக்கொண்டும் பணியாற்ற முடியும் எனவும் கூறினார். அப்போது, நாங்கள் படகேறி பணியாற்றிக்கொண்டிருக்கிறோம், நீங்கள் நீந்திக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என ஊக்கப்படுத்தினார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் 80% க்கு மேலே நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 20% தான் உள்ளது. அதையும் நிச்சயம் காப்பாற்றுவான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனக் கூறினார்.