தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்காமல் பருவமழை பெய்து அணைகள் நிரம்பும் போது வெளியேறும் உபரிநீரை அதிகளவு தமிழ்நாட்டிற்கு கர்நாடகா வழங்கி வருகிறது.
2018ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை விட அதிகளவு நீரை அதாவது வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை வழங்கி கர்நாடக கணக்கு காட்டியுள்ளது.
2018 -19ம் ஆண்டில் கர்நாடகாவிலிருந்து 405.43 TMC தண்ணீர் வந்துள்ளது. இது வழங்கப்பட வேண்டிய நீரை விட 228.18 TMC அதிகமாகும்.
2019 – 20ம் ஆண்டில் கர்நாடகாவிலிருந்து 275.16 TMC தண்ணீர் வந்துள்ளது. இது வழங்கப்பட வேண்டிய நீரை விட 97.91 TMC அதிகம்.
2020 – 2021ம் ஆண்டில் கர்நாடகாவிலிருந்து 211.32 TMC தண்ணீர் கிடைத்துள்ளது. இது வழங்கப்பட வேண்டிய நீரைவிட 34 TMC அதிகமாகும்.
2021 – 22ம் ஆண்டு, அதாவது நடப்பு ஆண்டில் 281 TMC தண்ணீர் கர்நாடகா மூலம் வந்திருக்கிறது. இது வழங்கப்பட வேண்டிய நீரை விட 103.82 TMC அதிகமாகும்.
கடந்த 4 ஆண்டுகளில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி 709 TMC நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா 1173 TMC தண்ணீரை வழங்கியுள்ளது.
அதாவது தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 709 TMC தண்ணீருடன் கூடுதலாக 464 TMC தண்ணீரை கர்நாடகா வழங்கியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி செயல்படாத கர்நாடகா, மழை பெய்யாத காலங்களில் குறைவான தண்ணீரையும், பருவமழை காலங்களில் தேக்கி வைக்க முடியாத நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டு கணக்கு காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.