ஹைதராபாத்: ‘குடும்ப அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்’ என ஹைதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் 1 மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையம் சென்றடைந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி உட்பட பல மூத்த பாஜக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
பின்னர் பேகம்பேட்டில் ஏற்பாடு செய்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ”தெலங்கானா மக்களுக்கு நமஸ்காரம்” என தெலுங்கு வணக்கம் தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.
அவர் மேலும் பேசியது: ”உங்கள் அபிமானமே என்னுடைய பலம். நம்பிக்கை, வீரத்திற்கு மாற்றுப்பெயர் தெலங்கானா மக்கள். அவர்களுக்கு என்னுடைய மரியாதைக்குரிய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தெலங்கானாவை தொழில்நுட்ப மாநிலமாக மாற்றுவோம். தெலங்கானாவின் வளர்ச்சி இளைஞர் கையில்தான் உள்ளது. ஆனால் ஒரு குடும்பத்திற்காக தெலங்கானா போராட்டம் நடைபெறவில்லை.
ஒவ்வொரு தெலங்கானா பாஜக தொண்டரும் வல்லபாய் பட்டேல் காட்டிய வழியில் நடக்க வேண்டும். இளைஞர் சக்தியால் தெலங்கானாவை ஒரு சக்தி மிக்க மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். சுய லாபத்திற்காக இங்கு அரசியல் நடக்கிறது. தெலங்கானாவைப் பின்னுக்கு தங்கவைக்கும் சக்தி அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. பாஜகவின் போராட்டம் நல்ல தெலங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதே.
தெலங்கானாவில் மாற்றம் கட்டாயம் வரும். இனிதான் ஆட்டம் ஆரம்பம். குடும்ப அரசியலால் தெலங்கானாவை கட்டிப்போட நினைக்கிறார்கள். அது நடக்காது. ஏதாவது செய்து அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அக்குடும்பம் படாத பாடுபடுகிறது. குடும்ப அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கே கேடு விளைவிக்கும். வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம்.
தெலங்கானாவில் அடுத்தது பாஜக ஆட்சிதான். தெலங்கானா மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தங்களது மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவே நினைக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் இங்கு பெயர் மாற்றப்பட்டு மாநில அரசு லாபமடைய நினைக்கிறது. நாங்கள் மக்கள் பக்கம் உள்ளோம். ஜன்தன் யோஜனா, கிசான் சம்மான் திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவி புரிந்து வருகிறோம்.
தெலங்கானாவில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடப்பது என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தெலங்கானாவிற்காக 3 பாஜக தொண்டர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். 8 ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றினோம். இனியும் பணியாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அதன் பின்னர் ஹைதராபாத் கச்சிபவுலி பகுதியில் உள்ள இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் கல்லூரிக்கு சென்றார். அங்கு அவரை மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் வரவேற்றனர். இங்கு 20-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 800 மாணவ, மாண்வியருக்கு பதங்கங்கள் வழங்கி பாராட்டி பேசினார். பின்னர் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வருவதற்கு முன்பே, சந்திப்பை தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். இதனால் சந்திரசேகர ராவின் பாஜக மீதான கோபம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.