கோவையில் 4 மாதத்தில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது .போலீஸ் கமிஷனர் தகவல்… கோவை: கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரிப்பது, விற்பது, கடத்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற் கொள்கிறார்கள். அந்த வகையில் கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் 4 மாதத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 30 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களில் கோவை மாநகரில் மட்டும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, ரேசன் அரிசி கடத்தல், உட்பட பல்வேறு குற்றச் செயலில் ஈடுபட்ட 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் 22 பேர் தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர். இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் அதிகபட்சமாக 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால்மாநகரில் குற்றச்செயலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறையும். சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்படும். குண்டர் சட்டத்தில் கைதானவர்களின்வழக்கை விசாரித்து உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்கள் மேலும் குறையும் .இவ்வாறு அவர் கூறினார்.