சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உயர்த்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை புறநகர் பகுதியில் தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாகவும், புதிதாக மாநகர காவல் ஆணையரகமும் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டுக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு நடந்தது. தற்போது, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் சானடோரியம் பகுதியில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனைகளுக்கு நடுவே உள்ள காலி நிலத்தில், இந்த இரண்டு அலுவலகங்களை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 5 ஏக்கர் நிலமும், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு 4.3 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ள இடத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ”முதல்வரால் அறிவிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் கட்ட இந்த பகுதியில் நிலம் ஒதுக்கியுள்ளோம். தொற்றுநோய்க்கான சிகிச்சை மையம் 30 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற ₹125 கோடி நிதி சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும். சென்னையின் நுழைவாயிலில் சிறப்பான மாநகராட்சி கட்டிடம், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தரம் உயர்த்தப்பட்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி என வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற உள்ளது. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் இப்பணியை விரைவுபடுத்த சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.