`வாதிடுவதற்கு மத்திய அரசிடம் வேறு எந்த விஷயமும் இல்லை என்றால், பேரறிவாளனை நாங்களே விடுதலை செய்வோம்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறி உள்ளனர்.
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் , கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய வழக்கு விசாரணை நடைபெற்ற போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் ஆளுநருக்கு தான் இருக்கிறது’ என வாதிட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘இந்த விவகாரம் மாநில அரசின் உரிமை சார்ந்த விஷயம். மாநில அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்புகிறது என்றால், அதற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பது சட்ட விதிமுறைகள். இதை உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள தெளிவுபடுத்தி இருக்க கூடிய நிலையில், இந்த வாதத்தை ஏற்க மாட்டோம்’ என கூறினார்கள்.
அதற்கு மத்திய அரசு தரப்பில் ‘அமைச்சரவையின் முடிவின் மீது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டது. இனி இதன் மீது கருணை அளிப்பது அல்லது அமைச்சரவை முடிவை நிராகரிப்பது அல்லது மீண்டும் அதனை ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என்ற மூன்று வாய்ப்புகள் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. அவர் அதனை சட்டத்திற்குட்பட்டு செய்வார்’ என வாதம் முன்வைக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘ஆளுநர் இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததே தவறென நாங்கள் சொல்லும் பொழுது, குடியரசுத் தலைவரின் முடிவு குறித்த வாதங்களை மத்திய அரசு வைப்பது ஏற்புடையது அல்ல’ என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘மத்திய அரசு தரப்பு மேற்கொண்டு எந்த ஒரு வாதங்களையும் முன் வைப்பதற்கு தேவையில்லை என்று சொல்லும் பட்சத்தில், இந்த இடத்திலேயே நாங்கள் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிப்போம். எனினும் மத்திய அரசுடைய கருத்துக்களையும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்’ என அதிரடியாக கூறினர். தொடர்ந்து, “இந்த விவகாரத்தை இந்திய அரசியல் சாசனம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மிக முக்கியமான விஷயமாக நாங்கள் கருதுகிறோம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன், இந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் பார்க்காமல் தனது விடுதலைக்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்கின்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களுடைய வழக்கின் மீது சரியான நகர்வுகள் இல்லாத பட்சத்தில், உச்ச நீதிமன்றம் அவர்களின் விடுதலை விவகாரத்தில் முடிவெடுத்திருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த விவகாரத்தையும் நாங்கள் ஏன் அணுகக்கூடாது?’ என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ஆளுநரின் அதிகாரம் குறித்த வாதங்களை முன்வைக்க முயன்ற பொழுது “இவ்விவகாரத்தை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டத்திற்கு உட்பட்டு பேரறிவாளனை விவகாரத்தில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம். குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ… யாராக இருந்தாலும் அவர்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்கள்தான்’ என்பதை மீண்டுமொரு திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்