செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் ராகிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை விட நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, நடுரோட்டில் நடனமாடுவது, பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, ஆசிரியர்களை தாக்குவது, பைக் ரேஸ் போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரிக்கார்டு நோட்டு கேட்ட ஆசிரியரை மாணவர்கள் அடிக்க பாய்ந்து ஆபாசமாக பேசி மிரட்டியதை அடுத்து 3 மாணவர்களை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், வேலூர் தொரப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் பெஞ்ச், டெஸ்க்கினை உடைத்து அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலானதை அடுத்து 10 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையிலேயே பள்ளி மாணவர்களை ராகிங் செய்த நடனம் ஆட வைப்பது போலவும் ஒரு மாணவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களை விசிறி மூலம் விசிறவைத்துள்ளனர்.
இதில், நடனம் ஆடாத மாணவர்களையும், சரியாக காற்று வீசாத மாணவர்களை உடன் பயிலும் மாணவர்கள் அடித்துள்ளனர். கல்லூரிகளிலேயே மாணவர்களுக்குள் மாணவர்கள் ராகிங் செய்யக்கூடாது என கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இதுபோல பள்ளிகளில் மாணவர்கள் ராகிங் செய்வதை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருவதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.