தமிழ் புத்தாண்டு மற்றும் புனிதவெள்ளியை ஒட்டி, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில், ‘2021-22ஆம் கல்வி ஆண்டில் 14.04.2022 வியாழக்கிழமையன்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 15.04.2022 வெள்ளிக்கிழமையன்று புனித வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், 16.4.2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறை முடிவுபெற்று 18.04.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.