உலகின் மிகப்பெரிய முருகன் சிலை :
உலகில் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படும் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடியில் உள்ளது.
தற்போது சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதான் தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது.
2015-ம் ஆண்டு திட்டமிட்டு 2016-ம் ஆண்டு முதல் இதன் திருப்பணி தொடங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளிலில் இருந்து மண்கள் கொண்டுவரப்பட்டு முருகன் சிலை வடிக்கும் பணியானது துவக்கப்பட்டது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜப் ஸ்தபதியின் குழுவினர் தான் இந்த முருகன் சிலை வடிவமைப்பதில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
சுமார் 3 கோடி ரூபாய் செலவில், 146 அடி உயரத்தில், வசீகரிக்கும் சிரித்த முகத்துடன், வலது கை அபயஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போன்றும், இடது கையில் வேலை பிடித்தும் மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகன். சிலையின் அருகிலேயே ஒரு லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பக்தர்கள் மேலேறி வந்து முருகன் கையில் உள்ள வேலுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம். சேலம் முருகனின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றப்பட்டுள்ளது. சுவாமி பஞ்சவர்ண நிறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக இந்த முருகன் எழுந்தருளியுள்ளார். ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.