நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம், இன்று நள்ளிரவு முதல் உயர்கிறது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சுங்க கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கீழ் உள்ள சாலையின் சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயரும் என, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
இதன் மூலம், நாடு முழுவதும் 460-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல், சுங்க கட்டணம் உயர்கிறது. இதில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 28 சுங்கச் சாவடிகளிலும் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.
சென்னையை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர், சென்னசமுத்திரம், வானகரம், சூரப்பட்டு ஆகிய 4 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு நாளை முதல் 5 முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று லாரி உட்பட கனரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் 45 முதல் 240 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள 5 சுங்கச்சாவடிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால், அவற்றை அகற்றுமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு அண்மையில் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அங்கெல்லாம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வாகன உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்துள்ளது.
இதனால் ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்ட சரக்கு கட்டணம் உயர்த்தப்படும் சூழல் உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.