கோவை போளுவம்பட்டி வனப்பகுதியில் உடல்நல குறைவால் அவதிப்படும் 8 வயது பெண் யானைக்கு, கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனச்சரகம் முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில், நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, 8 வயது பெண் குட்டியானை உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருவதை கண்டறிந்தனர்.இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அறிக்கப்பட்டது.
அதன் பேரில், கால்நடை மருத்துவர் குழுவினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் யானை நடமாட்டத்தை கண்காணித்து கண்டறிந்தனர். தொடர்ந்து, உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உள்ள அந்த பெண் யானைக்குட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக டாப்சிலிப் பகுதியில் இருந்தும் யானை கண்காணிப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
மருத்துவக்குழுவினரின் முதற்கட்ட ஆய்வில், யானையின் வாய்ப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. 90 சதவீத நாக்கு அறுபட்டு உள்ளது. இதனால், யானை அவுட்டுக்காய் கடித்து வெடித்ததில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது மயக்க நிலையில் உள்ள யானைக்கு வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளது.