சென்னை : போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பார்த்து பாராட்டி ஆட்சியரின் 6 வயது மகள் பரிசளித்த சம்பவம் சக காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமை காவலர் சாலமன் சதீஷ்(44). இப்பகுதியில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் “பீக் ஹவர்ஸ்” எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்குள்ளாவது வழக்கம்.
ஆனால், போக்குவரத்து தலைமை காவலர் சாலமன் சதீஷ் இதனை பணிச்சுமையாக கருதாமல், மிகவும் சுறுசுறுப்பாக தனது பணியை உற்சாகத்துடனும்,வாகன ஓட்டிகளிடம் நடந்து கொள்ளும் விதத்தையும், அவ்வழியே தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர் பாஸ்கரபாண்டியனின் மகள் மோனா மிர்தண்யா(6), அந்த போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி அவருக்கு டைரி ஒன்றினை பரிசாக அளித்தார்.
1ம் வகுப்பு படிக்கும் சிறுமி, “கூறுகையில் நான் பள்ளிக்கு போகும் போதும், வரும் போதும் போக்குவரத்து போலீஸ் அங்கிளை பார்ப்பேன். இன்று அவங்களுக்கு கிப்ட் கொடுத்தேன். அவங்க எல்லா டிராஃபிக் போலீஸ் அங்கிள் மாதிரி உட்கார்ந்து இருக்க மாட்டாங்க. ஹானஸ்டா அவங்க டியூட்டிய பார்ப்பாங்க, என கூறியுள்ளார்.
இது குறித்து போக்குவரத்து தலைமை காவலர் கூறுகையில், “திடீரென ஒரு கார் வந்து நின்றது, குழந்தை இறங்கி வந்து அங்கிள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லா டியூட்டி பாக்குறீங்க என்று கூறி டைரி ஒன்றை வழங்கியது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தது,” தெரிவித்தார்.