1914ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி எஞ்சின் 2017ம் ஆண்டு வரை நீலகிரி மலை ரயில் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
நூறாண்டுகளைக் கடந்தும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த எஞ்சினுக்கு ஓய்வு வழங்கப்பட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
அதன் திறன் குறித்தும், பழுதற்று செயல்படும் தன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் இந்த எக்ஸ் க்ளாஸ் எஞ்சி ந் 37384 திருச்சியில் உள்ள கோல்டன் ராக் பணி மணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு என்னென்ன பழுது இருக்கிறதோ அவை அனைத்தும் சரி செய்யப்பட்டது. இன்னும் 20 நாட்களில் அந்த பணி முடிவுற்றவுடன் மீண்டும் நீலகிரிக்கு கொண்டு வந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நீலகிரி மலை ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பலரும் வரவேற்றுள்ளனர். ‘உலகத்தில் வேறெங்கும் இந்த வகை ரயில் எஞ்சின்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்டு நூற்றாண்டை தாண்டியிருக்கும் இந்த எஞ்சின் மீண்டும் மலை ரயில் சேவையில் இணைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று இந்த பாரம்பரிய நினைவு சின்னத்தை பாதுகாக்க விரும்பும் ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோல்டன் ராக் பணி மனை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்த எஞ்சினை (எண் 37400) 2021ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் பயன்பாட்டிற்கு வைத்தது. பழைய எஞ்சின் நிலையாக செயல்பட, 10 நாட்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் பொறியியல் மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த எஞ்சினின் அருமையை உணர்த்தும் பொருட்டு, இதன் தொழில்நுட்பம் குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.