பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவ காரத்தை தொடர்ந்து இந்து – முஸ்லிம் சமூகத்தினரிடையே விரிசல் அதிகரித்துள்ளது.
முஸ்லிம் கடைகளில் இந்துக்கள் பொருட்களை வாங்க கூடாது என இந்துத்துவ அமைப்பினர் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்துக்களை எதிர்க்கும் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும், கோயில் விழாக்களில் கடைகள் அமைப்பதற்கு முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கர்நாடகாவில் ஷிமோகா, சிக்கமகளூரு, உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்ட கோயில் விழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோயிலில் ஏப்ரல் 3-வது வாரத்தில் திருவிழா நடைபெறுகிறது. இதில் கடை அமைப்பதற்கு 31-ம் தேதி நடைபெறும் ஏலத்தில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஷிமோகா, உடுப்பி மாவட்டங்களிலும் கோயில் திருவிழாவின் போது முஸ்லிம் வியாபாரிகள் கடை அமைக்க அனுமதி இல்லை என பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பத்ராவதி, பத்கல், ஹாசம் உள்ளிட்ட இடங்களில் கோயில் வீதியில் முஸ்லிம்கள் கடை வைப்பதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்எல்ஏ யு.டி.காதர் நேற்றுசட்டப்பேரவையில் எழுப்பினார். அதற்கு மாநில சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி, ‘இதுபோன்ற சம்பவங்கள் அரசின் கவனத்துக்கு வரவில்லை. மதரீதியான மோதலை அரசு ஒருபோதும் ஊக்குவிக்காது” என்றார்.