அமைச்சர் கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப் பட்டதால், திருச்சி டிஐஜி வருண் குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. Ramajayam Murder Case இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு வசம் சென்றது. பல ஆண்டுகளாகியும் கொலை யாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த வழக்கை தமிழக போலீசாரின் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டம் என்று ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார்உள்ளிடக்கிய ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவை பிறப்பித்தது. இந்த குழுவானது தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கில் பல்வேறு கோணத்தில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கொலைக்கான காரணம் மற்றும் உள்நோக்கமும் ஆராயப்பட்டு புலன் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பி.யாக பதவி வகித்த ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி புலன் விசாரணை நடந்து வந்தது. ஆனால் அவர் தற்போது கடலூர் எஸ்.பி.யாக பணிபுரிந்து வருவதால் இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அவருக்கு பதிலாக திருச்சி அல்லது அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த புலன் விசாரணை அதிகாரிகளை நியமித்தால் வழக்கின் புலன் விசாரணைக்கு எளிதாக இருக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான ஜெயக்குமாருக்குப் பதிலாக திருச்சி டிஐஜி வருண் குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை கூடுதலாக நியமித்து உத்தரவிட்டார். இவர்கள் ஏற்கெனவே உள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகளுடன் இணைந்து இந்த வழக்கை விரைவாக துப்பு துலக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.