தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். அதே போல் முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவ, மாணவியருக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0