டெல்லி: டிரம்ப்பின் நடவடிக்கையால், ஐரோப்பிய யூனியனுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையே முட்டல் மோதல்கள் எழுந்திருக்கின்றன. எனவே, இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் விருப்பம் தெரிவித்திருக்கிறது. நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய யூனியனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், தடையற்ற வர்த்தகம் குறித்து பேசியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தமாக மாறினால், உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இது இருக்கும்.
ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன?:
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து என ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 27 நாடுகளை உள்ளடக்கியதுதான் ஐரோப்பிய யூனியன். தொழிற் புரட்சி காலத்தில் இந்த நாடுகளில் பல கண்டுபிடிப்புகள் உருவாகின. ஆனால், இவை சிறிய நாடுகள் என்பதால் தங்கள் கண்டுபிடிப்பு களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் எழுந்தது. எனவே, நாம் ஏன் ஒன்று சேரக்கூடாது? என்று யோசித்தன. 1950களில் இதற்கான முயற்சிகள் எழுந்தன. தொடர் முயற்சியால் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கு என பொதுவான கரன்சியாக யூரோ உருவாக்கப்பட்டது. அதேபோல உறுப்பினர் நாடுகளுக்கிடையே வர்த்தக தடைகளின்றி பொருட்கள் மற்றும் சேவைகள் பரிமாறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. பொருளாதாரம், சுற்றுச்சூழல், குடியுரிமை, மனித உரிமைகள் போன்ற பல்வேறு அம்சங்களில் உறுப்பு நாடுகள் இணைந்து முடிவெடுகின்றன. சிம்பிளாக சொல்வதெனில் அமெரிக்கா, சீனாவுக்கு போட்டியாக வளர்வதே ஐரோப்பிய யூனியனின் நோக்கம்.
இந்தியாவுடன் நெருக்கம் ஏன்?:
என்னதான் தனியாக வளர ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டாலும், அமெரிக்காவின் உதவி தேவையாக இருந்தது. தொடக்கத்தில் அமெரிக்கா உதவி செய்தாலும், போக போக அது தனது வேலையை காட்ட தொடங்கியது. ஐரோப்பிய யூனியனுக்கான முக்கியதுவத்தை கொடுக்கவில்லை. அதிலும் டிரம்ப் வந்த பின்னர், யூனியனுக்கான முக்கியத்துவத்தை அடியோடு கைவிட்டுவிட்டார். எனவே ஐரோப்பிய யூனியன் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் செய்ய முன்வந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை டெல்லி வந்த யூனியன் தலைவர், நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ள இரு தரப்பும் தீர்மானித்துள்ளன.
சந்திப்பின் நோக்கம் இதுதான்:
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மோடி, “இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புத்தாக்கம், பாதுகாப்பு, திறன் வளர்ப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார். அதேபோல ஐரோப்பிய யூனியன் தலைவர் பேசுகையில், “நிலம், கடல், வெண்வெளி உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான வியூக ஒத்துழைப்பை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இதுதான் சரியான நேரம். இந்தியாவுடன் பாதுகாப்புசார் ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய யூனியன் யோசித்து வருகிறது” என்று கூறியுள்ளார். இலங்கை மற்றும் மாலத்தீவை ஏற்கெனவே சீனா வளைத்து கைக்குள் போட்டு வைத்திருக்கிறது. இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் தனது பலத்தை நிலைநாட்ட ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்புசார் ஒப்பந்தம் இந்தியாவுக்கு அவசியமாகும்.
உலகின் மிகப்பெரிய வர்த்தகம்:
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த 2008ம் ஆண்டிலிருந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில காரணங்களுக்காக இது பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்போது பேச்சுவார்த்தை ஒப்பந்தம் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. ஆயத்த ஆடைகள், மருந்துகள், உருக்கு, பெட்ரோலிய பொருட்கள், மின் இயந்திரங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து ஐரோப்பிய யூனியனு க்கு ஏற்றுமதி ஆகிறது. அங்கிருந்து வாகனங்கள், மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று யூனியன் கோரியிருக் கிறது. இரு நாடுகளின் வர்த்தகத்தை பொறுத்த அளவில், கடந்த 2023-2024ம் ஆண்டில் சரக்கு ரீதியில் இருதரப்பு வர்த்தக மதிப்பு ரூ.12 லட்சம் கோடி. சேவை ரீதியில் இருதரப்பு வர்த்தக மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடி. இப்படி இருக்கையில் இரு தரப்பிலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடந்தால் சீனா, அமெரிக் காவை இந்தியா தூக்கி சாப்பிட்டுவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.