விடுமுறை கிடைக்காததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி.

கோவை, பிப். 28:விடுமுறை கிடைக்காததால் விரக்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் காரர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார்.கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இதையடுத்து கோவை மாநகர் மற்றும் புறநகரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்காக திருப்பூர், ஈரோடு, நீலகிரியில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அதன் படி ஈரோடு ஆயுதப்படையை சேர்ந்த பார்த்திபன் ( வயது32) என்பவரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று சிறுவாணி ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. மனைவின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் தனது உயரதிகாரிகளிடம் சென்று விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று இரவு பிளேடு வாங்கி திடீரென தனது கழுத்தை அறுத்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.