கோயில் திருவிழாக்களில் குடும்பத்துடன் நகை பறிக்கும் கும்பலை சேர்ந்த 2 பெண்கள் கைது.

கோவையில் கடந்த வாரம் மட்டும் பஸ்களில் பயணம் செய்த 2மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பஸ்சில்நகை பறிக்கும் கும்பலைபிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில், உக்கடம் இன்ஸ்பெக்டர் ரவி, தனிப்படை போலீசார் எஸ்.ஐ .க்கள் மாரிமுத்து, உமா, மஞ்சு மற்றும் போலீசார் கார்த்தி, பூபதி ஆகியோர் நகை பறிக்கும் பெண்களை தீவிரமாக தேடி வந்தனர்.
தொடர்ந்து தனிப்படை போலீசார் கடை வீதி பகுதியில் சாதாரண உடையில் கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் பஸ்சில் 2 மூதாட்டிகளிடம் நகையை பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர், தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பக்கம் உள்ள மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நந்தினி (28) மற்றும் காளிஸ்வரி (28) ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்கள் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்களை கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவரும் அண்ணன் – தம்பியை திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் பல வருடங்காலாக குடும்பத்துடன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். காளிஸ்வரி தனது தாயாருடன் சேர்ந்து 12 வயதில் திருட்டை தொடங்கி உள்ளார். திருமணத்திற்கு பின்னர் கணவரின் அண்ணன் மனைவி நந்தினியை தன்னுடன் சேர்ந்து கொண்டு திருட்டை தொடர்ந்து வந்துள்ளார். இவர்கள் இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட தனது குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக கோயில் திருவிழாக்களை குறி வைத்து கூட்ட நெரிசலில் பெண்களிடம் நகைகளை திருடி வந்துள்ளனர். திருடும் நகைகளை அந்தந்த பகுதிலேயே விற்று பணமாகி கொள்வார்கள். அந்த பணத்தை வைத்து அவர்கள் இருக்கும் மாவட்டத்தில் சுற்றுலா சென்று வந்துள்ளனர். அதேபோல அவர்கள் செல்லும் பகுதியில்தற்காலிக கூடாரம்அமைத்து வசித்து வந்துள்ளனர். கோவையில் துடியலூரில் கூடாரம் அமைத்து இருந்து வந்துள்ளனர். அவர்கள் திருட்டில் கிடைக்கும் பணத்தில் தூத்துக்குடியில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தங்களது பிள்ளைகளை பெரிய பள்ளி -கல்லூரிகளில்படிக்க வைத்து வருகிறார்கள். கோவையில் இருவரும் பேரூர் மற்றும் கோனியம்மன் கோயில் திருவிழா நடக்க இருப்பதை தெரிந்து கொண்டு இங்கு வந்துள்ளனர். திருவிழா நடக்க இன்னும் நாட்கள் இருப்பதால் பஸ்களில் மூதாட்டிகளை குறி வைத்து நகையை பறித்து வந்தனர். அடுத்த திருட்டில் ஈடுபட இருந்த அவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டோம். அவர்கள் 2 மூதாட்டிகளிடம் பறித்த 11 பவுன் நகையும் மீட்கப்பட்டது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.