காதலியிடம் ரூ 2. லட்சம் கேட்டு மிரட்டிய ஐ.டி. ஊழியர் கைது.

கோவை; நாமக்கல் மாவட்டம் ,பரமத்தி வேலூர் .பொத்தனூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜவகர் ( வயது 25)இவர் தற்போது பெங்களூர் ஒயிட் பீல்டு,பிரசாந்தி லேஅவுட்டில் வசித்து வருகிறார்.அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார்..இவருக்கும் கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் எற்பட்டது. ஜவகர் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்தார். பல்வேறு இடங்களுக்கு சென்றபோது ஜவகர் தனது செல்போனில் அந்த இளம் பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் ஜவகர் நடவடிக்கையில் இளம் பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் மேலும் சில பெண்களிடம் தகாத முறையில் பழகி வந்துள்ளதாக தெரிகிறது .இதை அறிந்த அந்த இளம்பெண் அவருடன் இருந்த பழக்கத்தை விட்டு விட்டார். இதனால் கோபம் அடைந்த ஜவகர் அந்த இளம் பெண்ணுடன் பழகிய போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர் களுக்கு அனுப்பினார். மேலும் அவர் இளம்பெண்ணின் நடத்தை குறித்து தவறாக சித்தரித்து பேசி உள்ளார். மேலும் தான் பழகிய காலங்களில் செலவு செய்த ரூ 2 லட்சத்தை திருப்பித் தர வேண்டும் என கூறி தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வந்தார். இளம் பெண்ணின் உறவினர்களுக்கும் அவரைப்பற்றி தகாத முறையில் தகவல் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த இளம்பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து ஜவகரை நேற்று கைது செய்தார் அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்..