கொழும்பு ; இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி இரட்டிப்பாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.
இலங்கை ரூபாயின் மதிப்பை அரசு சமீபத்தில் வெகுவாக குறைத்தது. இதனால் ஏற்றுமதி, சுற்றுலா துறை பாதித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியது. இதனால், அங்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த கடன் தொகை கடந்த மாத நிலவரப்படி ₹52,440 கோடியாக உள்ளது. ஆனால், அந்நிய செலாவணி கையிருப்பாக ₹17,480 கோடி மட்டுமே உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வு அடைந்துள்ளது. சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின் பற்றாக்குறையினால் நாடு முழுவதும் தொடர் மின்வெட்டு அமலில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருட்கள் ஒரே வாரத்தில் 1000 ரூபாயாக உயர்ந்துள்ளன. விலைவாசி இரட்டிப்பாக உயர்ந்ததை அடுத்து இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று முதல் 4,199 ரூபாயாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக உணவகங்களில் ஒரு கோப்பை தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. அரிசி கிலோ ரூ. 450க்கும் பால் லிட்டர் ரூ. 75க்கும் விற்பனை ஆகிறது. வடை ஒன்று ரூ.80க்கு விற்பனை செய்து ஆக வேண்டிய நிலை ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து பல உணவகங்கள் தேநீர் விற்பனையை நிறுத்தியுள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து பொதுமக்கள் குதித்துள்ளதால் சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் உதவியை கோத்தபய அரசு நாடியுள்ளது. அதே சமயம் பொருளாதார பிரச்னையை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.