சிபிஐ அதிகாரி போல செல்போனில் பேசி முதியவரிடம் ரூ. 10.50லட்சம் மோசடி.

கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 75) இவர் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் சிபிஐ அதிகாரி என்றும் மும்பையில் இருந்து பேசுவதாகவும் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து அந்த நபர் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது அவரின் பின்புறம் சூழல் போலீஸ் நிலையத்திலிருந்து பேசுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த நபர் சுப்பிரமணியிடம் உங்கள் வங்கி கணக்கு மூலம் சட்ட விரோதமாக பலருக்கு பணம் அனுப்பி உள்ளீர்கள். எனவே உங்கள் வங்கி கணக்கை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். உங்கள் வங்கிக் கணக்கில் ரூ 10 லட்சத்து 60 ஆயிரம் இருப்பு இருக்கிறது. அதை நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வையுங்கள் அந்த பணம் தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்திய பின்னர் ஒரு வாரத் தில் உங்கள் வங்கிக் கணக்குக்கு திருப்பி அனுப்பி விடுகிறோம். அப்படி அனுப்பவில்லை என்றால் உங்களை கைது செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன சுப்பிரமணி அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு தனது வங்கி கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்து 60 ஆயிரத் தை அனுப்பினார். ஆனால் ஒரு மாதம் ஆகியும் அந்த பணம் திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை. இதையடுத்து சுப்பிரமணியிடம் சிபிஐ அதிகாரி போல பேசிய நபரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது ‘ ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டு இருந்தது. பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் ” ஸ்விட்ச் ஆப் ” என்று பதில் வந்தது. அப்போதுதான் சுப்பிரமணிக்கு தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது .இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.