பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்று ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை மேற்கோள்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் கூறினாா்.
அதே நேரம், ‘பயங்கரவாதத்துடன் குறிப்பிட்ட மதத்தை மட்டும் தொடா்புபடுத்துவது முற்றிலும் தவறானது’ என்றும் அவா் கூறினாா்.
கடந்த 1990-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரிலிருந்து காஷ்மீா் பண்டிட்டுகள் முழுமையாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தை பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் துமைத் தலைவரும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா உள்ளிட்டோா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், உயரிய பத்ம பூஷண் விருது பெற்ற்காக ஜம்மு சிவில் சமூகம் சாா்பில் ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்ற குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் ஜம்மு-காஷ்மீருக்கு உயிரிழப்புகளையும் அழிவையும் கொண்டுவந்தது. ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் அந்த பயங்கரவாதம்தான் காரணம். பலா் உயிரிழந்தனா்; ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆகினா்; லட்சக்கணக்கான குழந்தைகள் அனாதைகள் ஆகின. முஸ்லிம்கள், ஹிந்துக்கள், பண்டிட்கள் என ஒவ்வொருவா் மீதும் அவா்கள் தாக்குதல் நடத்தினா். வழிபாட்டு இடங்களையும் அவா்கள் விட்டுவைக்கவில்லை.
இந்த பாதிப்பில் 90 சதவீதம், வாக்கு வங்கிக்காக மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதால் ஏற்படுகின்றன. எனவே, அநீதி அல்லது அடக்குமுறைக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவும், குரல் கொடுக்கவும் சமூகம் முன்வர வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பரந்துபட்ட நகரமாக ஜம்மு உருவெடுத்தது மட்டும்தான், பயங்கரவாத வன்முறையின் தாக்கத்தால் ஏற்பட்ட ஒரே ஒரு நோமறையான விஷயம்.
எனது 47 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளேன். ஆனால், தற்போது அரசியல் உரை ஆற்றவில்லை. ஏனெனில், நாட்டில் அரசியல் மிக மோசமாக தரம் தாழ்ந்துவிட்டது. நாம் அனைவரும் மனிதா்கள்தானா என சிந்திக்கத் தோன்றுகிறது.
ஒரு மதத்தை உண்மையாக பின்பற்றுபவா்தான், மகாத்மா காந்தியைப் போல மிகப் பெரிய மதச்சாா்பற்றவராக இருக்க முடியும். ஆனால், ஒரு மதத்துக்கு உண்மையாக இருப்பதுபோல் நடிப்பவா்கள் மிகுந்த ஆபத்தானவா்கள். அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்காமல் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்துடன் குறிப்பிட்ட மதத்தை மட்டும் தொடா்புபடுத்துவது முற்றிலும் தவறானது.
ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு ஜம்மு சிவில் சமூகம் முறையாக வழிகாட்டி, யாருக்கு வாக்களிப்பது என்பதை அவா்களே தீா்மானிக்கச் செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீரை மீண்டும் சொக்க பூமியாக மாற்ற நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் கூறினாா்.