சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் இன்று (மார்ச் 21) நேரில் ஆஜராகினர்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019-ல் இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை நடத்தியது.அதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
கடந்த மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எய்ம்ஸ் மருத்துவர்களும் காணொலி மூலம் விசாரணையில் பங்கேற்றிருந்தனர். அப்போலோ மருத்துவர்கள் 4 பேர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஒருவர் என மொத்தம் 5 பேர் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பாபு மனோகர், அருள்செல்வம், ராமகிருஷ்ணன், சுந்தர் மற்றும் காமேஷ் உள்ளிட்டோர் மார்ச் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்பும், பின்னும் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கம் அளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் முன் இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் முதன்முறையாக ஆஜராகினர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையத்தின் சார்பில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியுமா?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘மறைந்த ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்ததை தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி தெரியாது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது.
அந்தசமயம் நான் எனது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் எனது உதவியாளர் மூலமாகவே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை தெரிந்துகொண்டேன். அடுத்தநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த அப்போதைய தலைமைச் செயலாளரிடம் விவரங்களை முழுமையாக கேட்டறிந்தேன்’ என்றார்.
‘விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? விசாரணை ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்?’ என்று ஆணையத்தின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, மெட்ரோ ரயில் நிகழ்ச்சியல் ஜெயலலிதாவை பார்த்தேன். அதன்பிறகு நான் அவரை பார்க்கவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.