கோவை சரகத்தில் இந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தியதாக 815 பேர் கைது.

கோவை டிசம்பர் 30தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையில் கோவை சரகத்தில்கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை பொள்ளாச்சி பகுதியில் இருந்து பெரும்பாலும் கேரளாவுக்கு தான் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க தமிழக -கேரள மாநில எல்லையில் கலந்தாய்வு கூட்டம் வாளையார் பகுதியில் நடந்தது. இதில் இரு மாநில வருவாய் துறை அதிகாரிகள், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை, பொள்ளாச்சி ,நீலகிரி பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கை நடந்து வருகிறது .குறிப்பாக தமிழக -கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி செல்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ரேஷன் அரிசி கடத்தியதாக 695 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 196 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்திய 11 பேர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர சமையல் கேஸ் சிலிண்டர்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்தியதற்கு 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தை பதுக்கி வைத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 டன் உரம் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 211 இருசக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள், 70 நான்கு சக்கர வாகனங்கள் என 293 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 50 வாகனங்களை ஏலம் விட்டதில் ரூ.30 லட்சத்து 37 ஆயிரம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.