கோவை, கவுண்டம்பாளையம், கந்தகோனார் நகரை சேர்ந்தவர் ராஜன், ( வயது 45. ) தொழில் செய்து வருகிறார். கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர்மாதம் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிஜாய், (வயது46) மற்றும் அவரின் மனைவி ரெகனா ஆகியோர் இவருக்கு அறிமுகமானர்கள் . பிஜாய் இந்தியன் ரயில்வேயில் அதிகாரியாக உள்ளதாக ராஜனிடம் தெரிவித்தார். தனக்கு சொந்தமாக பாலக்காடு அகழியில் இடம் இருப்பதாகவும் அதை விற்பனை செய்ய பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ராஜனை அகழிக்கு அழைத்துச்சென்று ஒரு இடத்தை காட்டியுள்ளனர். ராஜனுக்கு இடம் பிடித்திருந்ததால் வாங்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, நவக்கரையில் உள்ள ராஜனின் இடத்துக்கு வந்த பிஜாய் மற்றும் அவரின் மனைவி அகழியில் உள்ள இடத்தை கிரையம் செய்து தர ரூ. 1 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரம் பணம் கேட்டனர். மேலும், பத்திர பதிவு வேலைகளை முன்கூட்டியே தயார் செய்து வைக்க வேண்டும் எனக்கூறி ரூ. 5 லட்சம் பணத்தை பெற்றனர்.அதன் பின்னர், ராஜன், 2023ம் ஆண்டு அக். 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை, 15 தவணைகளில் ரூ. 1 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை அனுப்பினார். பணத்தை பெற்று பல நாட்கள் கடந்தும், பிஜாய் இடத்தை கிரையம் செய்து கொடுக்கவில்லை. ராஜன் நேரிலும், போனிலும் பலமுறை கேட்டும் பிஜாய் முறையாக பதிலளிக்கவில்லை. மாறாக பல்வேறு காரணங்கள் கூறி காலம் கடத்தி வந்தனர்.
இதையடுத்து ராஜன், பிஜாயின் வீட்டுக்கு சென்ற பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு பிஜாய் தான் ரயில்வேயில் பெரிய அதிகாரியாக இருப்பதாகவும், அரசியல் பிரமுகர்களை எல்லாம் தெரியும் எனவும் கூறி பணத்தை திருப்பி தர முடியாது என மிரட்டினார். மேலும், பணத்தை கேட்டு வந்தால் ஆள் வைத்து கொன்று விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், ராஜன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த, 17ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிஜாய் மற்றும் அவரது மனைவி ரெகனா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்த பிஜாயை மாவட்ட குற்ற பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி ரெகனாவை குறித்து விசாரித்து வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0