கோவை அக்டோபர் 26 தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து வருகிறது .இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7:மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணி பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் காற்று மாசு தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மருத்துவ மனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகளில் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது. பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும்: இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy1
Sleepy0
Angry0
Dead0
Wink0