லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி அமையவிருக்கிறது.
பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தோல்வியை சந்தித்தன. மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக மட்டும் 255 இடங்களைக் கைப்பற்றியது.
கடந்த தேர்தலில் தோற்றதால், இந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என சமாஜ்வாதி நினைத்தது. அதனால் குடும்பத்தினருக்கு சீட் தருவதில் கறாராக இருந்தது. முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவுக்கு சமாஜ்வாதியில் சீட் மறுக்கப்பட்டது. அதனால் அவர் சமாஜ்வாதியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
முலாயம்சிங் யாதவின் 2-வது மனைவி சாதனா குப்தாவின் மகன் பிரதீப் யாதவ். அவரது மனைவிதான் அபர்ணா யாதவ். பிரதீப் யாதவுக்கும் அர்பணா யாதவுக்கும் 2011 -ல் திருமணம் நடைபெற்றது. 2017-ல் லக்னோ கன்டோமெண்ட் தொகுதியில் அபர்ணா யாதவ் போட்டியிட்டு பாஜகவின் ரீட்டா பகுகுணாவிடம் தோல்வி அடைந்தார்.
பாஜக-வில் இணைந்துள்ள அபர்ணா யாதவின் தந்தை அரவிந்த் சிங், பத்திரிகையாளர். அவரது தாய், தந்தை இருவரும் உ.பி. அரசில் அதிகாரிகளாக பணிபுரிகின்றனர். ஏற்கனவே என்.ஆர்.சி. விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தவர் அபர்ணா. அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கத்தையும் ஆதரித்தவர் அபர்ணா.
பாஜகவில் இணைந்தாலும் அபர்ணா யாதவுக்கு சீட் தரவில்லை. இதனால் அபர்ணா சோகத்தில் இருந்தார். அவரை பாஜக தலைமை சமாதானப்படுத்தியது. இந்நிலையில், பாஜக வெற்றி பெற்றதும், அபர்ணா யாதவும் அவரது மகளும் யோகி ஆதித்யநாத்துக்கு வெற்றித்திலகமிட்டனர். இந்நிலையில், அபர்ணா யாதவுக்கு ஒரு ஜாக்பாட் அடிக்கவிருக்கிறது.
அபர்ணா யாதவ் தனக்கு சீட் தராவிட்டாலும், பாஜகவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அதற்காகவும், எதிர் கட்சியின் முக்கிய குடும்ப உறுப்பினரை பாஜக அமைச்சராக்கி இருக்கிறது என்பதற்காகவும் அபர்ணா யாதவை சட்டமேலவை உறுப்பினராக்கி, யோகி ஆதித்யநாத்தின் கேபினட்டில் அமைச்சர் பதவி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த செய்தியறிந்து அபர்ணா யாதவ் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.