சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், அக்கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராகவும், அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.
இதனால், கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, கே.பி.ராமலிங்கம் கடந்த 2020-ம் ஆண்டு திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, கே.பி.ராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். உடனே, அவருக்கு பாஜகவின் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கே.பி.ராமலிங்கம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.