டெல்லியில் நடைபெற்ற பொது மற்றும் புறம்போக்கு நிலங்கள் பாதுகாப்பு மாநாட்டில் துறைசார் வல்லுனர்கள் கருத்து!

இந்தியாவின் பொது நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களின் பாதுகாப்பு குறித்து மாநாடு டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது, இந்த மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, பொது நிலங்களை எவ்வாறு பாதுகாத்து, அவற்றை சிறப்பாக பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மாநாட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் பொது நிலங்கள் மற்றும் நிலங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மரக்கூழ் உற்பத்தி போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டில், பொது நிலங்களைப் பாதுகாக்க பல்வேறு துறைகள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு இடையே கூட்டு முயற்சிகள் அவசியம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்துவதன் மூலம் பொது நிலங்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்றும், குறிப்பாக பெண்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிலிருந்து பொது நிலங்களைப் பாதுகாத்து, மீள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பொது நிலங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தினர். இளைஞர்களை பொது நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவும், பொது நிலங்களைப் பற்றிய தரவுகளை சேகரித்து, அவற்றை பயன்படுத்தி சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பொது நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் மாநாட்டில் பங்கேற்ற வல்லுநர்கள் வலியுறுத்தினர். மாநாடு, இந்தியாவின் பொது நிலங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், பொது நிலங்களைப் பாதுகாத்து, அவற்றை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்க உதவும் என்றும் நம்பப்படுகிறது என்றனர்.