3 நாட்கள் நடந்த சோதனையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 178 பேர் மீது வழக்கு.

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் வருகிறது. அதன்படி கடந்த 23-ம் தேதி முதல் 25 -ம் தேதி வரையிலான 3 நாட்கள் போலீசார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் 126 இருசக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர் ரக கார்கள், உள்ளிட்ட 4 சக்கர வாகன உபயோ கிப்பாளர்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக அனைத்து மதுபான கூட உரிமையாளர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது மதுபான கூடங்களுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும்போது வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மதுபான கூட்டத்திற்கும் மது அருந்த வருவோர் தங்களின் வாகனத்தை இயக்க டிரைவருடன் வருவதை மதுபான கூட உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும் மது அருந்திய நபரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல மாற்று வாகனத்துடன் டிரைவரை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நம்பகரமான டிரைவர் மூலம் மது குடித்த நபரை அவருடைய சொந்த வாகனத்தில் வீட்டில் விட்டு வர மதுபானக்கூடம் சார்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். மது குடிக்க வருபவர்கள் வேறு ஏதேனும் போதை பொருட்கள் உபயோகிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் அனைத்து மதுபானம் கூடங்களின் உள்ளும் வெளி புறத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மதுபான கூடங்களில் ஏதேனும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் மதுபான கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி முதன்முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவோர் மீது ரூ 10 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது. எனவே மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக் கூடாது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.