திமுக எம்பி ராஜ்குமார், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் நட்பு பாராட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சட்டப்பேரவை அரசு உறுதிமொழி ஆய்வு குழு கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. அக்குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பயனாளிகளுக்கு புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேடை அரங்கில், கோவை பாராளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் அக் கூட்டத்திற்கு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன் மற்றும் கே ஆர் ஜெயராமன் அரங்கிற்கு வந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் எம்பி ராஜ்குமார், அவருக்கு அருகில் இரண்டு இருக்கைகளை ஒதுக்கி, இருவருக்கும் கை கொடுத்து நட்பு பாராட்டி அமர வைத்தார். அம்மன் அர்ஜுனன் மற்றும் எம்பி ராஜ்குமார் நெடுங்கால நட்பு போன்று சிரித்து பேசி பழகியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்ததாக கூட்டத்திற்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி மற்றும் ஏ கே செல்வராஜ், எம் பி  ராஜ்குமாரை பார்த்து இருகை கூப்பி வணக்கம் சொல்லி அமர்ந்தனர். இதனை பார்த்து ஆச்சரியமுற்ற அரசுத்துறை அதிகாரிகள், இதே போல் இரு கட்சியினரும் ஒற்றுமையிடன் இருந்தால், மக்கள் நலத்திட்ட பணிகளை எவ்வித தடங்களும் இன்றி சிறப்பாக செய்ய முடியும் என பேசிக்கொண்டனர். எனினும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பி ராஜ்குமார், இதற்கு முன்பு அதிமுகவில் கோவை துணை மேயராக பொறுப்பில் இருந்தவர். அதனால் கடந்த கால அதிமுக கட்சி பாசம் தான் இந்த நட்பிற்கு காரணம் என்ற குரல்களும் கேட்க தான் செய்தது.