ஸ்கூட்டர் மீது கார் மோதி கணவன் – மனைவி பரிதாப சாவு.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 50) இவரது மனைவி லதா ( வயது 45) இவர்கள் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு கோகுல் ( வயது 22) தீபன் ( வயது 20 )ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் பெருமாநல்லூர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகின்றனர் .அந்த கட்டுமான பணிகளை கணவன் -மனைவி இருவரும் அவ்வப்போது சென்று பார்வையிட்டு வந்தனர். அதன்படி கட்டுமான பணிகளை பார்வையிடநேற்று முன் தினம் சென்றனர். இரவில் அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று காலையில் அவர்கள் இருவரும் புதுப்பாளையத்திற்கு ஸ்கூட்டரில் புறப்பட்டனர். அவிநாசி வேலாயுதம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது பெங்களூரில் இருந்து கோவை நோக்கி அதி வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்ற கணவன் – மனைவி இருவரும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை பார்த்து மகன்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.