திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நுாலகம் அமையவுள்ள இடத்தை உதயநிதி பார்த்தார். பின் அங்கிருந்து திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சென்றார்.
அங்கு, 2.5 கோடி செலவில் கட்டப்படவுள்ள அங்கூரான் அறிவியல் மையம் கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி மற்றும் சிப்காட் ஆகியவை அமையவுள்ள இடங்களையும் அவற்றின் வரைபடங்களையும் அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து பஞ்சப்பூர் சென்ற அவர் அங்கு திருச்சி ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார். பஸ் ஸ்டாண்ட் தொடர்பான காணொலி காட்சியையும் பார்வையிட்ட உதயநிதி பின்னர் திருச்சி மத்திய பஸ்ஸ்டாண்ட் அருகே கலையரங்கில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்ட விழாவிலும் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது தமிழக திராவிட மாடல் அரசு தினமும் மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்து கொண்டுள்ளது. அதன் பயனாக லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றியை கொடுத்துள்ளீர்கள். கிராமந்தோறும் விளையாட்டு உபகரணங்களை கொடுக்க வேண்டும் என்று தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக வீரர்கள் உலகளவில் சாதனைகளை படைத்து வருகின்றனர்.
தடகளவீரர் ராஜேஷ் விபத்தில் கால்களை இழந்தபோதும் நம்பிக்கை இழக்காமல் பாரா விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார். அரியலுாரைச் சேர்ந்த செஸ் வீராங்கணை சர்வானிகா பல சாதனைகளை படைத்து வருகிறார். விளையாட்டுத்துறை வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் துவக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, 16 வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தான், தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேஷன் துவக்கப்பட்டு, அதன் மூலம், இதுவரை, 10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்றுள்ளனர். தமிழக அரசின் விளையாட்டுத்துறை சாதனைகள் தொடர, இளைஞர்கள் பங்களிப்பு மிகமிக அவசியம். அதிலும் குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது.
நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 31 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெற்றுள்ளனர். இதுவரை நான் முதல்வர் திட்டத்தில், 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தலைவியும், இதுவரை, 11 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமான பெண்கள் இந்த உதவித்தொகையை பெறுவார்கள் தமிழக அரசு பெண்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று உதயநிதி பேசினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0