திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு பாலியல் சீண்டல்.

திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு தலைமை காவலர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திருச்சி மத்திய சிறை டி ஐ ஜி கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலம் காவல் நிலையப் பகுதியில் நடந்த திருட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள திருச்சியைச் சோ்ந்த சாரங்கன் (32) என்ற திருநங்கைக்கு அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த தலைமைக் காவலா் மாரீஸ்வரன் தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து சாரங்கன் திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளா் ஆண்டாள், டிஐஜி ஜெயபாரதி உள்ளிடோரிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து அவா் திருச்சி மாவட்ட நீதிமன்ற இலவச சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் அளித்த புகாரின்பேரில், நியமிக்கப்பட்ட சுப்புராமன் என்ற வழக்குரைஞா் சிறை வளாகத்தில் விசாரணை மேற்கொண்டாா். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தலைமைக் காவலா் சாரங்கன் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று வந்தது உறுதியானது. தொடா்ந்த விசாரணையில் சாரங்கன் அளித்த புகாரின் உண்மைத் தன்மை தெரியவந்தது. இந்த சம்பவத்தை அடுத்து சாரங்கன் புகாா் குறித்து முறையான நடவடிக்கை எடுக்காத திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளா் ஆண்டாள், டிஐஜி ஜெயபாரதி, தலைமைக் காவலா் மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி, சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா்தயாள் உத்தரவிட்டாா். கடந்த இரு நாட்களுக்கு முன் டிஐஜி ஜெயபாரதி வேலுாா் காவலா் பயிற்சிப் பள்ளிக்கும், கண்காணிப்பாளா் ஆண்டாள் திருச்சி காவலா் பயிற்சிப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்த சம்பவம் திருச்சி மத்திய சிறை காவலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.