60 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது.

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைபோலீசார் சம்பவம் இடமான நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று வாகன சோதனை நடத்தினர். அப்போது 4 சக்கர வாகனத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சித்திரை மகன் சப்பானிமுத்து (வயது 30) மற்றும் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சத்யராஜ் மகன் வர்கீஸ் ராஜ் (வயது 36) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 60 கிலோ 400 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.