மதுரையில் தனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் அமைத்த முத்துமணியின் மறைவுக்கு அவரது மனைவியிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினி ஆறுதல் கூறினார்.
மதுரையைச் சேர்ந்த முத்துமணி (65), நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் பெயரில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கடந்த 1976ஆம் ஆண்டு மதுரையில் ரஜினிக்கு மன்றம் தொடங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தார்.
முத்துமணி மீது ரஜினிக்கு அலாதிப் பிரியம் உண்டு. அதன் காரணமாக தனது வீட்டு பூஜையறையிலேயே முத்துமணிக்குத் திருமணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், உடல்நலம் குன்றிய தனது ரசிகருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை ரஜினிகாந்த் செய்து வந்தார். முத்துமணி கடந்த மார்ச் 8ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். மதுரை கோ.புதூரில் வசித்து வந்த ஏ.பி.முத்துமணியின் உடல் மறுநாள் அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து முத்துமணியின் மனைவி லட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது, கடந்த 5 நாட்களாக, காய்ச்சல், சளி காரணமாக பேச முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். தங்களுடைய ஒரே மகளின் திருமணத்தைக் காணாமல் முத்துமணி மறைந்துவிட்டார் என்று குரல் தளுதளுக்க லட்சுமி கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த், ‘அதெல்லாம் கவலைப்படாதீங்க… மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவுகிறேன்’ என்று ஆறுதல் தெரிவித்தார்.