போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியாக நடித்து கோவை சித்த வைத்தியரிடம் ரூ. 40 லட்சம் மோசடி.

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ( வயது 70) சித்த வைத்தியர். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியாக உள்ளதாகவும், மும்பைக்கு உங்களது பெயரில் வந்த கூரியரில் போதைப்பொருள் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. எனவே உங்கள் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்ய உள்ளோம். என்று தெரிவித்தார்.இதனால் அச்சமடைந்த சித்த வைத்தியர் சந்திரசேகர் தான் போதை பொருள் கடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூரியரில் மும்பைக்கு எந்த பார்சலும் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து போனில் பேசிய மர்மநபர் சந்திரசேகரிடம் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். உடனே அவர் வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த நபர் சந்திரசேகரிடம் உங்களது வங்கி கணக்கில் உள்ள தொகையை நான் கூறும் வங்கிக் கணக்கிற்கு உடனே அனுப்ப வேண்டும் என்றும் அந்த பணத்தை சரிபார்த்த பின்னர் உடனடியாக திருப்பி அனுப்புவதாக தெரிவித்தார். இதனை நம்பிய சந்திரசேகர் உடனடியாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.40 லட்சம் அனுப்பினார். ஆனால் அந்த நபர் கூறி படி பணத்தை திருப்பி அனுப்பவில்லை. இதனால் தனது பணம் ரூ 40 லட்சத்தை மோசடி செய்தது அறிந்த அவர் இது குறித்துகோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பண பரிமாற்றம் செய்யப்பட்ட மர்ம நபரின் வங்கி கணக்குகளை முடக்கினர் .இதனால் அவர்கள் மோசடி செய்த தொகைரூ. 40 லட்சத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து நீதிமன்றம் மூலம் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரூ. 40 லட்சத்தை மீட்டு சித்த வைத்தியர் சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் பணம் மீக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் கூறியதாவது:-முன்பின் தெரியாத நபர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு எந்த காரணத்தை கொண்டும் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டாம். யாராவது கூரியரில் தங்களது பெயரில் போதைப்பொருள் வந்திருப்பதாக கூறி மிரட்டினால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.