இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முடக்க கூடாது திருச்சியில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

மறுசீரமைக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என்ற பெயரால் கற்பித்தல் மையங்களை மூடும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் கூறியபோது
கரோனா காலகட்டத்தில் முடங்கிப்போன கல்வியை மீட்டெடுக்கும் வகையில் தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்ட மாபெரும் திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம். பெற்றோா் மற்றும் மாணவா்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இத்திட்டமானது சுமாா் 2 லட்சம் தன்னாா் வலா்களுக்கு ரூ. ஆயிரம் ஊக்கத்தொகையுடன் ஒரு சிறப்பான பணிவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. எங்களையும் தன்னாா்வல ஆசிரியராக அடையாள அட்டையுடன் பெருமிதமாக சமூகத்தில் வலம் வரச் செய்தது. குழந்தைகளை கல்வியில் வளம்பெறச் செய்து பெற்றோரை நம்பிக்கையுறச் செய்தது. பள்ளி ஆசிரியா்களுக்கு சுமையைக் குறைத்த இத்திட்டமானது உலக மற்றும் இந்திய அளவில் சிறப்பான திட்டமாக செயல்பட்டு வந்தது. அரசும் இத்திட்டத்தின் வாயிலாக எங்களுக்கு கொடுத்த பணிகள் ஏராளம். அரசுப் பொருள்காட்சி, புத்தகக் கண்காட்சி, மராத்தான் வாசிப்பு இயக்கம் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறும்படம் கலைஞா் மகளிா் உரிமைத்திட்டம், காலணி அளவீடு, இ.கே.ஒய்.சி, மாதிரிப் பள்ளி தூதுவா் என பல்வேறு பணிகளைச் செய்தோம். அரசு கொடுத்த ஊக்கத் தொகையும் மாணவா்களுக்கு பரிசு பொருள் பேனா நோட்டு பென்சில் என அளித்து மாணவா்களை இடைவிடாது மாலை நேரக் கற்றல் மையங்களுக்கு வரச் செய்தோம். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவா்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பினால் கல்வியின் பக்கமே கவனம் செலுத்தாத நிலை மாற்றப்பட்டது. மாலையில் தவறாமல் இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களுக்கு வந்து பயிலத் தொடங்கினா். மாணவா்களின் கற்கும் திறனும் மேம்பட்டது. இந்தசூழலில் மறுசீரமைக்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் (2.0) என்ற பெயரில், முதல்வரின் ஆலோசனையை பெறாமலேயே புதிய வடிவில் திட்டத்தைச் செயல்படுத்த முயல்கின்றனா்.
இந்த மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தால் தன்னாா்வல ஆசிரியா்கள் மட்டுமின்றி பள்ளி மாணவா்களும் பெரிதும் பாதிக்கப்படுவா். குறிப்பாக கற்றபித்தல் மையங்கள் குறைக்கப்படவுள்ளனமாநிலம் முழுவதும் ஒரு லட்சம் மையங்களை மூடி ஒன்றியத்துக்கு ஒன்றோ இரண்டோ மையங்களை மட்டுமே செயல்படுத்தவுள்ளனா். மையங்கள் மூடப்படும் என்ற செய்தி ஆசிரியா்களையும் மாணவா்களையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோருக்கும் பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடங்கியபோது எப்படி செயல்பட்டதோ அதேபோன்று எந்தக் குறைவும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து மையங்களையும் அப்படியே தொடரச் செய்ய வேண்டும் என்றனா்.