கோவை மாவட்டத்தில் முட்டத்துவயலில் முற்போக்கு அமைப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். கோவை மாவட்டம் முட்டத்துவயல் பகுதியில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக மக்களிடம் கருத்து கேட்காமலும், விதிமுறைகளை மீறி மின் தகன மேடை அமைக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். மேலும் அங்கு விதிமீறல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் மின் தகன மேடை அமைப்பதில் முறைகேடு உள்ளதா என்பது குறித்து கண்டறிய தபெதிக, தமிழ் புலிகள் அமைப்பு உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அப்போது அவர்களை ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முற்போக்கு அமைப்பினர்கள் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததோடு, தாக்குதல் நடத்தினர். இது குறித்து முற்போக்கு அமைப்பினர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் முற்போக்கு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0