அணைகள் நீர்மட்டம் உயர்வு :ஆறு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் – மாநகராட்சி ஆணையாளர் தகவல் !!!

பில்லூர் நீர்மட்டம் தற்பொழுது 87 அடி , சிறுவாணியில் 8.7 அடியாக உள்ளது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கோவையில் குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பில்லூர் முதல் திட்டத்தில் இருந்து 25 எம்.எல்.டி .., 2 – வது திட்டத்தில் 89 எம்.எல்.டி, 3 – வது திட்டத்தில் 68 எம்.எல்.டி, பவானி கூட்டு குடிநீர் மூலம் 25 எம்.எல்.டி, ஆழியாரில் இருந்து 8 எம்.எல்.டி, சிறுவாணையில் இருந்து 45 எம்.எல்.டி என்று நகருக்கு தினமும் 255 எம் எல் டி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கோவை தெற்கு மண்டலம் 87, 88, 89, 90, 99 92, 93 வது வார்டுகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், 16, 17, 33, 35 வது வார்டுகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், 50, 51, 52, 53, 54 வது வார்டுகளுக்கு ஆறு நாட்கள் ஒருமுறையும், 70, 72, 76, 77, 78 வது வார்டுகளுக்கு ஏழு நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 25 வார்டுகளில் ஆறு நாட்களுக்கு ஒரு முறையும் 75 வார்டுகளில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சராசரியாக பார்த்தால் ஆறு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பில்லூர் மூன்றாவது திட்டம் நடைமுறைக்கு வந்து உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 2,108 இடங்களில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு ரூபாய் 99 கோடியில் 192.66 கிலோ மீட்டர் தூரத்துக்கு 1,245 இடங்களில் புதிய சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாநகராட்சி இடத்தில் வாகனம் நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராஜவீதி, குரூப் பாண்ட் சாலை, கிராஸ்கட் ரோடு பகுதியில் மாநகராட்சி வருமானம் வரும் வகையில் வணிக வளாகம் கட்ட ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.

கோவையில் இதுவரை ரூபாய் 53.22 லட்சத்தில் 7,603 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. ஒரு தெரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூபாய் 700 செலவாகிறது. தூய்மை பணியாளர்கள் 1,200 டன் குப்பைகளை தினமும் சேகரித்து குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கிறார்கள். குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க ஆங்காங்கே தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் மாநகராட்சி ஊழியர்களை சமாளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.