தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் நிலையில் உள்ள (கொள்முதல் பணியாளர்கள்) 313 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, அந்த நெல்லை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அரவை ஆலைக்கு அனுப்பி, அதனை அரிசியாக அரைத்து பின்னர் பொது விநியோக திட்டத்துக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய நெல் பெரும்பாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அணுகி, நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அங்கு ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 வரை லஞ்சமாக கேட்பது தொடர்ந்து நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு விவசாயிகளால் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொள்முதல் பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு போதிய ஊதியம் இல்லாததால் தான் விவசாயிகளிடம் பணம் கேட்கிறார்கள், எனவே இனிமேல் அவர்களிடம் லஞ்சம் கேட்க வேண்டாம் எனக்கூறி அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தஞ்சாவூரில் டிச.30-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்தார்.
ஆனாலும், விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெறும் செயல் மட்டுமே நிற்கவில்லை. இது தொடர்பாக முதல்வருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.
அதே நேரத்தில் நெல் கொள்முதல் பணிகளை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர்களை, கொள்முதல் அலுவலர்களாக அரசு நியமித்தது. ஆனால் இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்ததால், இந்த துறையில் காணப்படும் முறைகேடுகள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்ததாக தலைமையிடத்துக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பிரபாகர் நேற்று 9-ம் தேதி திடீரென தமிழகம் முழுவதும் பணியாற்றும் 313 கண்காணிப்பாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 25 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 24 பேரும், நாகை மாவட்டத்தில் 7 பேரும், சென்னை தலைமையிடத்திலிருந்து 30 பேரும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 16 பேரும், மதுரை மாவட்டத்திலிருந்து 14 பேரும், தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து தலா 12 பேரும் என மாநிலம் முழுவதும் 313 கண்காணிப்பாளர்கள் மண்டலம் விட்டு மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உடனடியாக தாங்கள் பணிபுரியும் இடத்திலிருந்து விலகி பணியிடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளிலேயே ஒரே நாளில் இந்த துறையில் மட்டும்தான் அதிகமானோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக வட்டாரங்கள் தெரிவித்தன.