திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட உள்ளது. தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்தால் ஜூலை மாதத்தில் மேட்டூர் அணை விவசாயிகளின் பாசனத்திற்கு திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை பிரித்து அனுப்ப, திருச்சி மாவட்டம் எலமனூர்-வாத்தலை இடையே முக்கொம்பு தடுப்பணை உள்ளது. இங்கிருந்து தான் காவிரியில் வரும் வெள்ளம் கொள்ளிடம் ஆற்றுக்கு பிரிகிறது. காவிரியின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை, அதிகபட்சமாக நீரை வெளியேற்றும் வகையில் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்னதாக முக்கொம்பு தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். ஷட்டரில் உள்ள ரோலர் சக்கரங்கள் மேலே தூக்கும்போதும், இறக்கும்போதும் அடிக்கடி அடிபட்டு அவற்றை இயக்குவது கடினமாகிறது. ஷட்டர்களை தூக்கும் சங்கிலி மற்றும் ரப்பர் சீல்களும் சேதமடைந்துவிட்டன. ஷட்டர் தகடுகள் அரிக்கப்பட்டு விட்டன. இவை அனைத்தும் சீரமைக்கப்பட்டு இன்னும் 10 நாட்களில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி காரணமாக காவிரிக்கு வரும் தண்ணீர் அப்படியே கொள்ளிடத்தில் திருப்பி விடப்படுகிறது. அதிகபட்சமாக தண்ணீர் வரும்போது தான் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது ஷட்டர் சீரமைப்பு பணியின் காரணமாகத்தான் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட நிர்வாகம் காவிரி கதவணை ஷட்டர்களில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே கொள்ளிட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0