பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி மன்னன் குண்டர் சட்டத்தில் கைது

கோவை: கரூர் மாவட்டம் பரமத்திபக்கமுள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் ( வயது 36) இவர் சினிமா தயாரிப்பாளர் என்று கூறி பலரிடம் மோசடி செய்து வந்தார் .இவர் மீது கடந்த 2022 -ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் பார்த்திபன் தன்னை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டார். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து பெண்கள் போலீசார் பார்த்திபனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் இவர் மீது கொடுத்த புகாரின் பேரிலும் அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம்செய்து, பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதே போல அரசு வேலை வாங்கி தருவதாககூறி உடையாம்பாளையத்தை சேர்ந்த பெண்ணிடம் ரூ 3 லட்சமும் , ஈரோட்டை சேர்ந்த 8 பேரிடம் ரூ. 20 லட்சமும் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார் இந்த நிலையில் மோசடி மன்னனாக வலம் வந்த பார்த்திபன் மீது கோவை பீளமேடு மற்றும் ஈரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர பார்த்திபன் மீது பாலக்காடு ,ஈரோடு, திருப்பூர் ,காங்கேயம் வடவள்ளி .காட்டூர், சரவணம்பட்டி தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 17 வழக்குகள் உள்ளன.. குற்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பார்த்திபனை குண்டர்சட்டத்தில் கைது செய்யக்கோரி கோவை பீளமேடு இன்ஸ்பெக்டர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்பேரில் போலீசார் பார்த்திபனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள பார்த்திபனுக்கு போலீசார் நேற்று வழங்கினர்.