திருப்பூர் அருகே பெண் கொலை: உடலை வைத்து காரில் ரவுண்ட் அடிச்ச கள்ள காதலன்: ரவுண்டு கட்டி தூக்கிய போலீசார்..

திருப்பூர் அருகே பல்லடத்தில் கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை, கொடைரோடு அருகே உடலை புதைக்க முற்பட்டபோது இரண்டு வாலிபர்கள் பிடிபட்டனர். உடலை ஏற்றி வந்த கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் மில்லில் பணியாற்றி வந்தவர் அருண் ஸ்டாலின் விஜய் (32) இவரது மனைவி பிரின்சி (27) இவர்களுக்கு 6 வயது மகன் உள்ளனர். இந்நிலையில் இதே கம்பெனியில் பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தை சேர்ந்த திவாகர் (24) இவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், ஒரு பையன் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பல்லடத்தில் தங்கி பிரின்சியுடன் ஒரே கம்பெனியில் பணியாற்றி வந்த போது, திவாகருக்கும் பிரின்சிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இதில் கள்ளக்காதலன் திவாகரிடம் கள்ளக்காதலி பிரின்சி, பணம், நகை கேட்டு தொல்லை மற்றும் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த திவாகர் பிரின்ஸ்சியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தில் உள்ள தனது உறவினர் இந்திரகுமார் (31) என்பவரை பல்லடத்திற்கு ஆம்னி கார் எடுத்து வரச்சொல்லி கூறியுள்ளார். பல்லடத்திற்கு காரில் வந்த உறவினர் இந்திரகுமார் மற்றும் திவாகர் ஆகிய இருவரும் பல்லடத்தில் ஒரு இடத்தில் கள்ளக்காதலி பிரின்சிக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த பிரின்சியை உனக்கு கிப்ட் பரிசு பொருள்கள் வைத்திருப்பதாகவும், நீ கண்ணை மூடிக்கொள். அந்த பொருளை சஸ்பென்சாக உனக்கு கொடுக்கிறோம் எனக்கூறியுள்ளனர். மகிழ்ச்சியில் கள்ளக்காதலனிடமிருந்து பரிசு பொருளை பெறுவதற்காக, பிரின்சி கண்ணை மூடிய போது, அவரை காரில் வைத்து லைலான் கயிரால் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை கொலை செய்யப்பட்ட பிரின்சி உடலை காருக்குள் வைத்து அவரை பல்லடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் செல்லும் வழியில் சாலையோரம் ஒரு இடத்தில் புதைக்க முடிவு செய்தனர். அதற்காக மண்வெட்டி மற்றும் கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரின்சி உடலை காருக்குள் வைத்து, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கொடைரோடு நான்கு வழி சாலை வழியாக மதுரை நோக்கி சென்றுள்ளனர். காரை திவாகரின் உறவினர் இந்திரகுமார் ஓட்டிச் சென்றார். காரை பின் தொடர்ந்து கள்ளக்காதலன் திவாகர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் இரவில் காரை சாலையோரம் நிறுத்தி, பிரின்சி உடலை புதைக்க திட்டமிட்டனர். அப்போது, அந்த வழியாக மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த காரை சோதனை செய்த போது, அதில் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற சென்ற அம்மையநாயக்கனூர் போலீசார், சடலமாக இருந்த கள்ளக்காதலி பிரின்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கள்ளக்காதலன் திவாகர் அவரது உறவினர் இந்திரகுமார் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் பெண்ணின் சடலத்தை ஏற்றி வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.