சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக சரிவு

கோவை மாநகர பகுதியில் உள்ள 100 வார்டுகளில் பில்லூர் 1, பில்லூர் 2, சிறுவாணி, ஆழியார் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது இதில் அதிகப்படியான வார்டுகளுக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த மாதங்களில் 30 அடிக்கு இருந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப் படி 10 அடியாக சரிந்து உள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3 கோடி லிட்டருக்கும் குறைவான அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநகரில் குடிநீர் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிறுவாணி நீர் மட்டுமின்றி பில்லூர் குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளில் சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை சில இடங்களில் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகரில் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காந்திபுரம், சிவானந்தா காலனி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்:- சிறுவாணி அணையில் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் நான்கு வால்வுகள் உள்ளன. அதில் மூன்று வால்வுகள் கீழ்நோக்கியும் நான்காவது வால்வு மேல் நோக்கியும் உள்ளன. தற்போது அணையில் நீர்மட்டம் 10 அடியாக குறைந்து உள்ளதால் மூன்றாவது வால்வு வெளியே தெரிகிறது. தற்போது அணையில் உள்ள தண்ணீர் மூலமாக இன்னும் ஒரு மாதத்திற்கு குடிநீர் விநியோகிக்க முடியும் என்றார்